கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு
வால்பாறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஒத்துழைத் தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார்.
வால்பாறை
வால்பாறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஒத்துழைத் தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார்.
சிறப்பு முகாம்
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் தடுப்பூசி போட வந்தவர்களிடம் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் தடுப்பூசி போட வந்த ஒரு மாற்றுத்திறனாளியின் வாகனத்தில் ஏறி, அவரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை
தொடர்ந்து வால்பாறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ வசதிகள் குறித்து டாக்டர் களிடம் கேட்டார்.
அப்போது டாக்டர்கள் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைக்கான கருவி கள் இருந்தும் அந்த கருவிகளை கையாள தொழில்நுட்ப பணியாளர் கள் இல்லாததால் அவசர கால நோயாளிகளை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
உடனே கலெக்டர், அரசு ஆஸ்பத்திரியில் நிரந்தரமாக தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது பணியில் உள்ள டாக்டர்களே எக்ஸ்ரே, ஈ.சி.ஜி போன்ற மருத்துவ கருவிகளை அவசர காலங்களில் கையாளுவதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
வேலைவாய்ப்பு
மேலும் வால்பாறை பகுதியில் வீடுகளில் பிரசவங்கள் நடைபெறுவதை தடுத்து, ஆஸ்பத்திரிகளில் நடக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் சமீரன், மாற்றுத்திறனாளி களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அதில் ஏராளமான மனுக்கள் வேலைவாய்ப்பு வேண்டி இருந்தது. உடனே பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறும்போது, தொடர் நடவடிக்கை காரணமாக கோவையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
வால்பாறை பகுதி மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக இங்கு தொற்று பரவல் குறைந்துவிட்டது. இதுபோன்று மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்றார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், தாசில்தார் ராஜா, நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பாபுலட்சுமண், வனச்சரகர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பிறகு கலெக்டர் சமீரன், வால்பாறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையம், நகராட்சி படகு இல்லம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story