சேலத்தில் முக கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளிக்கு அடி, உதை போதை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை


சேலத்தில் முக கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளிக்கு அடி, உதை போதை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2021 12:25 AM IST (Updated: 21 Jun 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முக கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த போதை வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் முக கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த போதை வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வீடுகளில் இருந்து வெளியே செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் நேற்று மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் இருந்துள்ளார். அவர் தினமும் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து வருவதாக கூறப்படுகிறது. 
இதனிடையே ரவுண்டானா அருகே மது போதையில் இருந்த வாலிபர்கள் 2 பேர், மாற்றுத்திறனாளியிடம் பேச்சு கொடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் மாற்றுத்திறனாளி, கொரோனா பரவுவதால் முக கவசம் அணிந்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். 
அடி, உதை
இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்துள்ளனர். இதை பார்த்து சாலையில் சென்றவர்கள் வாலிபரின் நடவடிக்கையை தட்டி கேட்டனர். மேலும் உடனடியாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போதையில் இருந்த வாலிபர்களை பிடித்து விசாரணைக்காக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story