கடலில் செத்து மிதந்த ராட்சத திமிங்கலம்
கடலூர் அருகே கடலில் ராட்சத திமிங்கலம் செத்து மிதந்தது. அது இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடலூர்,
கடலூர் அருகே தாழங்குடா மீனவர்கள் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடல் பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து மிதந்தது. அந்த திமிங்கலத்தை பறவைகள், கொத்தித் தின்று கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
இதை பார்த்த மீனவர்கள் இது பற்றி கடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் திமிங்கலம் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த திமிங்கலம் வயது முதிர்வின் காரணமாக இறந்ததா?, உணவு ஒவ்வாமை காரணமா? அல்லது கப்பல் மோதி இறந்ததா? என்று தெரியவில்லை. இறந்த திமிங்கலம் கரைக்கு ஒதுங்கினால் மட்டுமே அது எப்படி இறந்தது என்பது குறித்து தெரியவரும். கடற்கரைக்கு வந்த பிறகு அந்த திமிங்கலத்தை உடற்கூறு செய்து அடக்கம் செய்யப்படும் என்றார்.
இருப்பினும் திமிங்கலம் இறந்து துர்நாற்றம் வீசுவதால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story