கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்கலாம்-அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அந்த இடங்களை ஒப்படைக்க வேண்டுமென்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சிவகங்கை
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அந்த இடங்களை ஒப்படைக்க வேண்டுமென்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோவில் நிலம் மீட்பு
சிவகங்கை-மேலூர் ரோட்டில் கவுரி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் இடம் உள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வந்தார். மேலும் அங்கு அறை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அதிகாரிகள் அங்கு சென்று அந்த இடத்தை மீட்டனர். மேலும் கட்டப்பட்டிருந்த அறையின் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர்.
இந்தநிலையி்ல் இந்துசமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நேற்று மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, வருவாய் அதிகாரி லதா, இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் தனபால், சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்துகழுவன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
முறைகேடாக பட்டா
மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, அருகில் இருந்த மற்ற இடங்களை பார்த்து இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்று கேட்டார். அப்போது இந்த இடங்களும் கோவிலுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த இடங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேலும் அந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு சில இடங்கள் தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அது போல் முறைகேடாக பட்டாக்களை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அரசின் பதிவேடுகளை திருத்தி பலர் ஆக்கிரமித்து உள்ளனர். கோவில் நிலத்தை வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து கலெக்டரிடம் அந்த இடங்களை ஒப்படைக்க வேண்டும். கோவில் நிலங்களை பட்டா வழங்கியதில் முறைகேடுகள் செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க.வின் எச்.ராஜா கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் அந்த இடத்தின் விவரங்களை தெரிவித்தால் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அரசு ஊதியம் பெறாமல் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு 10 கிலோ அரிசி, 14 வகையான மளிகைப்பொருட்கள், ரூ.4ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இவ்வாறு வழங்கப்படுகிறது.
தவறு செய்தால் நடவடிக்கை
நிச்சயமாக யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்போம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அதிக வருமானம் வரும் தனியார் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபுவிடம், சேங்கை மாறன் மனு அளித்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதுரை மண்டபம் மெயின் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் 3 சென்ட் இடம் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தை கைப்பற்றி இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Related Tags :
Next Story