டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
வீரசோழபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீன்சுருட்டி:
குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மதுபானங்கள் வாங்க வருபவர்களிடம் அதிக தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது குவார்ட்டருக்கு 10 ரூபாயும், 750 மில்லி மதுபானத்திற்கு 30 ரூபாயும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு மதுபான விலையை உயர்த்தாத நிலையில் ஏன் இக்கடையில் மட்டும் விலை அதிகரித்து இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு மட்டும் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை மீண்டும் தந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
மதுப்பிரியர்கள் பாதிப்பு
இதுகுறித்து அந்த கடையில் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் சிலர் கூறுகையில், வீரசோழபுரத்தில் உள்ள கடையில் மட்டும் மதுபானங்களின் அளவிற்கு ஏற்றவாறு ரூ.10 முதல் ரூ.30 வரை விலை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தாதபோது, இக்கடையில் மட்டும் மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஏன் என்று தெரியவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால்துறை அதிகாரிகள், இந்த டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானங்களை விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
Related Tags :
Next Story