விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அவரது இதயம், நுரையீரல் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சேலம்:
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அவரது இதயம், நுரையீரல் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கூலி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன் (வயது 61). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு மகுடேஸ்வரன், மாதேஷ் (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மாதேஷ் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ந் தேதி மாதேஷ் வேலையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மாதேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உடல் உறுப்புகள் தானம்
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாதேஷ், சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மூளை செயலிழந்து சுயநினைவின்றி இருப்பது தெரியவந்தது.
அதனால் அவர் உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்று அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் சோகத்தில் மூழ்கிய அவரது பெற்றோர், மாதேசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இது தொடர்பான தகவல் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு அவரது உடல் உறுப்புகளை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹெலிகாப்டரில்...
இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த மாதேசின், கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் தனித்தனியாக அகற்றி அவற்றை சென்னை உள்பட பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக அவரது இதயம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் சேலம் வந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு சென்றனர். இதேபோல், மாதேசின் உடல் உறுப்புகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story