குற்றவாளிகளை கைது செய்ய கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குற்றவாளிகளை கைது செய்ய கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2021 4:09 PM IST (Updated: 21 Jun 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தில் பொருட்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்த விவசாயியை அடித்து உதைத்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

விவசாயி புகார்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கண்டிகையை சேர்ந்தவர் விநாயகம் (வயது 40). விவசாயி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வயலில் இருந்து மின்சாதன பொருட்களை அடிக்கடி திருட்டு போனது.இதுகுறித்து விநாயகம் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக 4 பேரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை விநாயகம் வேலையின் காரணமாக மணவாளநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது அவரை வழிமறித்த சிலர் ‘ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாய்?’ எனக்கூறி கையாளும் உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த விநாயகம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் நிலையம் முற்றுகை
இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகத்தூர் கண்டிகையை சேர்ந்த திரளான பொதுமக்கள் விவசாயி விநாயகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்த விநாயகத்தை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story