வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:52 PM IST (Updated: 21 Jun 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்: 


ரேஷன் அரிசி பதுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்வதாக மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. 

இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.


அதன்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


10 பேர் கைது
அப்போது திண்டுக்கல் மற்றும் விருவீடு பகுதியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மூதாட்டி உள்பட 2 பேர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த பெரியசாமி (வயது 48), விருவீட்டை சேர்ந்த பிரபாவதி (60) என்பதும், கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2½ டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதில் தற்போது பிடிபட்டவர்கள் உள்பட மொத்தம் மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் 10 பேரும் வீடுகளில் ரேஷன் அரியை கடத்தி வைத்து, கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்தனர் என்றனர்.

Next Story