அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு


அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 10:48 PM IST (Updated: 21 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கூத்தக்குடி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்

கண்டாச்சிமங்கலம் 

மரக்கன்றுகள் வளர்ப்பு

ஊரகவளர்ச்சித்துறை சார்பில் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமம் சந்தை தோப்பு அருகில் நிழல்வலை அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது எத்தனை வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது எவ்வளவு மரகன்றுகள் உள்ளன?. இதை பராமரிப்பது யார்? உற்பத்தி செய்யும் மரக்கன்றுகள் யாருக்கு வழங்கப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டார். இதற்கு தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை இங்கு வேம்பு, பூவரசு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் சுமார் 8,100 வளர்க்கப்படுவதாகவும், இவை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் பராமரிக்கப் படுவதாகவும், உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தியாகதுருகம் ஒன்றியத்துக்குபட்ட 40 ஊராட்சிகளுக்கும் இலவசமாக பகிர்ந்து வழங்கப்படுவதாகவும் கூறினார். 

7 ஏக்கர் நிலத்தில்

தொடர்ந்து சந்தைதோப்பு அருகில் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். பின்னர் நாகலூர் ஊராட்சியில் இலுப்பைத் தோப்பு பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டு பராமரித்து வரும் மரங்களை பார்வையிட்டார். அப்போது மரங்களுக்கு பாய்ச்ச போதிய தண்ணீர் வசதி இல்லை என அதிகாரிகள் கூறினர். ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். 

இதை அடுத்து கூத்தக்குடி மற்றும் நாகலூர் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம், காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் களப்பணியாளர்களின் பணி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், ஒன்றிய பொறியாளர்கள் விஜயன், ஜெயப்பிரகாஷ், தமிழ்ச்செல்வன், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story