கடலூர் அருகே நாட்டுவெடி வெடித்து வீடு தரைமட்டம் மக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு
கடலூரை அடுத்த குறிஞ்சிப்பாடி அருகே நாட்டுவெடி வெடித்து வீடு தரைமட்டமானது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
குறிஞ்சிப்பாடி,
கடலூ் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டையில் உள்ளது அருந்ததியர் தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதியில் தவிடன் என்பவருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு தொகுப்பு வீடு, நேற்று காலை 8.20 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அந்த பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் வெடிகுண்டு வெடித்து விட்டது என்று நினைத்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
போலீசார் விரைந்தனர்
வெடி வெடித்ததில் தவிடனின் ஓட்டு வீடு தரைமட்டமானது. மேலும் அருகே உள்ள அருண், ரவி மனைவி வெண்ணிலா ஆகியோரது வீடும் சேதடைந்தது.
அதிஷ்டவசமாக தவிடனின் வீட்டில் யாரும் இல்லாததால், உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்கள் நிகழவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், எல்லப்பன்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்(வயது 41) என்பவர் தவிடனின் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது.
நாட்டுவெடிகள்
மேலும், செந்தில் நாட்டுவெடி தயாரிப்பதற்கான வெடிமருந்தை(சல்பர்) வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்கென உரிய அனுமதி பெற்று அங்குள்ள ஏரிக்கு அருகே குடோன் ஒன்றையும் வைத்து இருக்கிறார். ஆனால், அனுமதிக்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து அவர் அதை இன்னும் புதுப்பிக்கவில்லை.
இதற்கிடையே தான், தவிடன் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வெடி மருந்துகளை வைத்திருந்ததுடன், தானே நாட்டு வெடிகளை தயாரிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அங்கு வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து விபத்து நேர்ந்தது தெரியவந்தது.
கலெக்டர் விசாரணை
இதனிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் விபத்து நேர்ந்தது குறித்தும், யாருக்கேனும் பாதிப்புகள் நேர்ந்ததா என்றும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் தாசில்தார் சையத் அபுதாஹீர் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பார்த்த சாரதி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்திலின் சகோதரர் ராஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story