ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம்
x
தினத்தந்தி 21 Jun 2021 11:06 PM IST (Updated: 21 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறை ஊரடங்கு தளர்வுக்குப்பின் அமலுக்கு வருகிறது.

ஊட்டி,

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறை ஊரடங்கு தளர்வுக்குப்பின் அமலுக்கு வருகிறது.

தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா உள்ளது. 22 எக்டர் பரப்பரளவில் இயற்கை அழகுடன் அமைந்து இருக்கிறது. 

பெரிய புல்வெளி மைதானம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பழமையான மரங்கள், மலர் மற்றும் அலங்கார செடிகள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பூங்காவின் நடைபாதை, சாலைகளில் தினமும் காலையில் உள்ளூர் மக்கள் நடைபயிற்சி சென்று வந்தனர். தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை பேணவும் வக்கீல்கள், அரசு ஊழியர்கள் உள்பட பலர் சென்றனர். இதற்கு கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டது. 

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நடைபயிற்சி செல்ல அனுமதி இல்லை. இதனால் காலை நேரங்களில் பூங்கா வெறிச்சோடி உள்ளது. இதற்கிடையே ஊரடங்கு தளர்வுக்கு பின் பூங்காவில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.

புதிய நடைமுறை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்ட பின்னர் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுவரை கட்டணம் இல்லாமல் நடைபயிற்சி செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்ட பிறகு மாதம் ரூ.200 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ரூ.2,400 கட்டணம் செலுத்த வேண்டும். எத்தனை மாதம் நடைபயிற்சி செல்கிறார்களோ அதற்கேற்ப கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

 பூங்கா நுழைவுவாயிலில் பாஸ் பெற்று உள்ளார்களா என்று சரிபார்த்த பின்னர் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் கட்டணம் அதிகமாக உள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோடை சீசனில் பூங்கா மூடப்பட்டால் தோட்டக்கலை துறைக்கு கடுமையாக வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.  அதனால் நடைபயிற்சிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளாக கூறப்படுகிறது.

Next Story