கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கரகாட்டம் ஆடியபடி வந்த கிராமிய இசைக்கலைஞர்கள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை


கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கரகாட்டம் ஆடியபடி வந்த கிராமிய இசைக்கலைஞர்கள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2021 11:06 PM IST (Updated: 21 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கரகாட்டம் ஆடியபடி கிராமிய கலைஞர்கள் வந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மனு அளித்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அனைத்து கிராமிய இசைக் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் மார்க்கெட் ரங்கா, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், மாவட்ட துணை தலைவர் சாந்தி, மகளிரணி துர்கா மற்றும் கிராமிய இசைக்கலைஞர்கள் கரகாட்டம் ஆடிய படியும், இசைக்கருவிகளை வாசித்தபடியும் வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வருமானம் இல்லை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கிராமிய இசைக்கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். கடந்த ஆண்டிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலக்கட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. தற்போதும் அதே நிலை தொடர்ந்து வருவதால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

ஆகவே கிராமிய இசைக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது போதுமானதாக இல்லை. 60 வயது நிரம்பிய அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இசைக்கருவிகள்

இலவச வீட்டுமனைப்பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவில், நாதஸ்வரம், தப்பட்டை, பம்பை, உடுக்கை போன்ற இசைக்கருவிகளை வழங்க வேண்டும். 

அரசால் நடத்தப்படும் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் இசைக்கலைஞர்களை பயன்படுத்த வேண்டும்.இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story