ஓசூரில் பரபரப்பு: வங்கியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி-அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்


ஓசூரில் பரபரப்பு: வங்கியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி-அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 11:09 PM IST (Updated: 21 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வங்கியின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக கிருஷ்ணமோகன் (வயது 58) என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்த பின்பு வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.
இந்தநிலையில் இரவில் அங்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் வங்கி முன்பு பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்து, அதனை செயலிழக்க செய்தனர். பின்னர் வங்கியின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து, பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர்.

அலாரம் ஒலித்தது

அந்த நேரத்தில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இரவு நேரத்தில் வங்கியில் திடீரென அலாரம் ஒலித்ததை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
அப்போது வங்கியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், வங்கி ஊழியர்களுக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார், வங்கி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

பரபரப்பு

மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று, வங்கியில் பதிவாகியிருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மேலும் கதவை உடைக்க மர்ம நபர்கள் பயன்படுத்திய கம்பி ஒன்று அங்கிருந்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் இரவில் கதவை உடைத்து வங்கியில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story