தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் வீடுகளில் 33 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு-தேன்கனிக்கோட்டையில் தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
தேன்கனிக்கோட்டையில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் வீடுகளில் 33 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடர்ச்சியாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
தாசில்தார் வீட்டில் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 45). இவர் அஞ்செட்டி மண்டல துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 28 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரத்தை திருடி சென்றனர்.
பொதுமக்கள் அச்சம்
இதேபோல் இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி என்பவரது வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த 5 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 2 மாதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், திருட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story