கண்ணமங்கலத்தில் பேய் விரட்டுவதாக கழுத்ைத அழுத்தி சிறுவனை கொன்ற தாய்


கண்ணமங்கலத்தில் பேய் விரட்டுவதாக கழுத்ைத அழுத்தி சிறுவனை கொன்ற தாய்
x
தினத்தந்தி 21 Jun 2021 11:44 PM IST (Updated: 21 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலத்தில் சிறுவனுக்கு பேய் விரட்டுவதாக கூறி கழுத்தை அழுத்தி கொன்ற தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம்

வலிப்பு நோய் 

வேலூர் அருகே உள்ள அரியூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி திலகவதி (வயது 35). இவரது மகன் சபரி (7). சிறுவன் சபரி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் வந்தவாசி செல்ல ஆட்டோ மூலம் திலகவதியும், அவருடைய சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோரும், சிறுவன் சபரியுடன் சென்றுள்ளனர்.

வந்தவாசி வரை செல்ல பணமில்லாததால் அவர்களை ஆட்டோ டிரைவர் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளார். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் அவர்கள் 4 பேரும்  கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கியுள்ளனர். 

கழுத்தை அழுத்தி கொலை

அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு வலிப்பு நோய் அதிகமானது. அப்போது சபரியை, பேய் பிடித்துள்ளதாகவும் அதை விரட்டுவதாக கூறி தாய் திலகவதி, அவரது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரும் சேர்ந்து, சபரியின் மார்பில் குத்தி, கழுத்தில் கைவைத்து அழுத்தியுள்ளனர். இதில் சபரி பரிதாபமாக இறந்துவிட்டான். 

இதனால் 3 பேரும் கதறிஅழுதுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  விசாரணை நடத்தினர். மேலும் சபரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று மதியம் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்த திலகவதி உள்ளிட்ட 3 பேரிடமும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 இச்சம்பவம் தொடர்பாக சபரியின் பெரியப்பா நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, திலகவதி, அவரது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story