நகர்புற கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதும் கூட்டம்


நகர்புற கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதும் கூட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 12:31 AM IST (Updated: 22 Jun 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

நகர்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் பற்றாக் குறை காரணமாக அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சி

நகர்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் பற்றாக் குறை காரணமாக அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக முதல் அலையை விட 2-வது அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது. 

இதற்கிடையில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

தற்போது நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப் படுகிறது. அதுவும் 200 தடுப்பூசிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப் படுகின்றனர். இந்த நிலையில பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. 

இதற்கு பலரும் முண்டியடித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடுதலாக ஒதுக்க வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப் படுகிறது. ஆனால் தடுப்பூசி போடுவது குறித்து எந்தவித தகவலும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை. 

தினமும் 100-க்கும் மேற்பட்டவர் கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது. 

குறைவாக தான் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறுகின்றனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு இருந்தும், தடுப்பூசி கிடைப்பதில்லை.

வயதானவர்கள், பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தும் தடுப்பூசி போட முடியவில்லை. இதே நிலை தான் கிராமப்புறங்களிலும் உள்ளது. சில நாட்களில் தடுப்பூசி வருவதில்லை. 

இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள அலைக்கழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story