சோலையார் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது


சோலையார் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 21 Jun 2021 7:05 PM GMT (Updated: 2021-06-22T00:35:04+05:30)

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோலை யார் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோலை யார் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. 

தொடர்மழை 

வால்பாறை பகுதியில் ஆண்ட தோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். ஜூலை மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்து மழை தீவிரமடைய தொடங்கி கனமழையாக கொட்டித் தீர்க்கும். 

ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டில் ஜூன் முதல் வாரத்திலேயே மழை தொடங்கி 2-வது வாரத்தில் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து ஒருவாரம் பெய்த தொடர்கனமழை காரணமாக இங்குள்ள வறண்டுகிடந்த நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

100 அடியை தாண்டியது 

இதன் காரணமாக குட்டைபோன்று ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்த சோலையார் அணை நீர்மட்டம் உயர தொடங்கியது. தற்போது அந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. 

தற்போது அணைக்கு வினாடிக்கு 1,219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 414 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக அந்த அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

3 ஆண்டுகள் 

பி.ஏ.பி. திட்டத்துக்கு அடிப்படை அணையாக உள்ள சோலையார் அணை பருவமழை காலங்களில் ஜூலை மாதத்தில்தான் 100 அடியை தாண்டும். கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் அந்த அணையின் நீர்மட்டம் 58 அடியாகதான் இருந்தது. 

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில்தான் ஜூன் மாதத்தில் அதன் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. தற்போது வால்பாறையில் பெய்து வரும் மழை அளவு குறைந்துவிட்டாலும், லேசாக மழை பெய்வதால் 160 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

விவசாயிகள் மகிழ்ச்சி 

அடுத்த மாதத்தில் மழை அதிகமாக பெய்தால் உடனடியாக அணை நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளது. 

இதனால் இந்த ஆண்டு கூடுதல் மின் உற்பத்திக்கும், சமவெளி பகுதியிலய் உள்ள ஆழியார், திருமூர்த்தி அணைகளுக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story