மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக் கிழங்குகளை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை


மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக் கிழங்குகளை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 21 Jun 2021 7:26 PM GMT (Updated: 2021-06-22T00:56:04+05:30)

மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக் கிழங்குகளை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் விளைந்துள்ள மரவள்ளிக் கிழங்குகளை வாங்க வியாபாரிகள் வராததால் விளைநிலங்களிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை மூலப்பொருள்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரவள்ளிக்கிழங்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வறட்சியைத்தாங்கி வளரக்கூடிய பயிராக மரவள்ளிக்கிழங்கு உள்ளது. இதனை உணவுத்தேவைக்காக தமிழக மக்கள் பயன்படுத்தினாலும் அதிக அளவில் கேரள மக்களே பயன்படுத்தி வருகின்றனர். தொழிற்சாலை மூலப்பொருளாகவும் மரவள்ளிக் கிழங்கு பயன்பட்டு வருகிறது. 
ஜவ்வரிசி தயாரிப்பிலும் ஸ்டார்ச் உற்பத்தியிலும் முக்கிய மூலப் பொருளாக மரவள்ளிக் கிழங்கு உள்ளது. இதற்கான தொழிற்சாலைகள் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் இயங்கி வருகிறது. வாகன எரிபொருளாகப் பயன்படக் கூடிய எத்தனால் தயாரிப்புக்கும் மரவள்ளிக் கிழங்குகளைப் பயன்படுத்த முடியும். எனவே வரும் காலங்களில் மரவள்ளிக் கிழங்குக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
ஜவ்வரிசி தயாரிப்பு
இதுகுறித்து மடத்துக்குளத்தையடுத்த வேடபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-
 கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளது. அந்தவகையில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் கேரள மாநிலத்திலும் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பவில்லை. இதனால் மரவள்ளிக் கிழங்குகளை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வியாபாரிகள் வருவதில்லை. மரவள்ளிக் கிழங்கு சாகுபடியைப் பொறுத்தவரை உழவு, உரம், பூச்சி மருந்து என்று பெருமளவு செலவு செய்துள்ளோம். கிழங்குகளை நடவு செய்த 8 மாதம் முதல் அறுவடை செய்யத் தொடங்கலாம். தொடர்ந்து 12 மாதம் வரை அறுவடை செய்ய முடியும்.
ஆனால் தற்போது 12 மாதம் கடந்தும் வாங்குவதற்கு ஆளில்லாமல் காய்ந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும் நிலையில் தெருவோரங்களில் விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் வந்து 100 கிலோ, 200 கிலோ என்ற அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் பெருமளவு கிழங்குகள் முற்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒரு கிலோ கிழங்கு ரூ. 10 வரை விற்பனையானது. தற்போது ரூ. 3-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. எனவே இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு  அவர் கூறினார்.

Next Story