மணல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 21 Jun 2021 8:29 PM GMT (Updated: 21 Jun 2021 8:29 PM GMT)

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட்
திருச்சி அருகே உள்ள உத்தமர்சீலி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரங்களில் தனியாருக்கு சொந்தமான வயலில் அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலர் இரவு, பகலாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக, திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசாருக்கு திருச்சி மண்டல ஐ.ஜி உத்தரவிட்டார். அதன்பேரில், கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் கடந்த 19-ந் தேதி உத்தமர்சீலி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லணை-திருச்சி சாலையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி அதன் டிரைவர் மணிகண்டம் ஒன்றியம், கீழபஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் மதுமணி (வயது 24) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மணல் உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான வயலில் தோண்டி எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதுமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணல் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்துவை தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story