ஜம்புநதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை


ஜம்புநதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2021 8:41 PM GMT (Updated: 21 Jun 2021 8:41 PM GMT)

ஜம்புநதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

பாவூர்சத்திரம்:
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடாரிடம், ஜம்புநதி- இளைஞர்கள் மீட்புக்குழுவினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு தமிழக அரசால் ரூ.41.5 கோடி நிதி ஒதுக்கி, ஆகஸ்டு 15-ந் தேதி கால்வாய் வெட்டும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. வனத்துறை பகுதிக்குள் (சுமார் 3 கி.மீ. தூரம்) கால்வாய் வெட்டுவதற்கு, வனத்துறை அனுமதி வாங்காததால், கால்வாய் வெட்டும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் 362 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. மேற்கண்ட இரண்டு தடைகளை அகற்ற, தாங்கள் அரசிடம் எடுத்துக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்திலேயே இழப்பீடு தொகைக்கான காசோலையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டையில் எஸ்.பி.என். திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா நடந்தது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், ஆலங்குளம் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்கள் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினர். மைய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர் மனோகர் மையத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியும், நிகில் அறக்கட்டளை நிர்வாகியுமான சோம நாகலிங்கம் மையத்தின் செயல்பாடு குறித்து பேசினார். விழாவில் சுரண்டை டாக்டர்கள், முருகையா, ராகவேந்திரா அஸ்ரன்னா, மோகன் ராவ், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரத்தின கனகசபாபதி நன்றி கூறினார்.



Next Story