‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி கடிதம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி கடிதம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:59 PM GMT (Updated: 2021-06-22T02:29:17+05:30)

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு, அனிதாவின் தந்தை கடிதம் எழுதியுள்ளார்.

செந்துறை:

அனிதாவின் தந்தை
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்ைத சேர்ந்தவர் சண்முகம்(வயது 55). இவரது மகள் அனிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் நீட் தேர்வு காரணமாக அவருக்கு மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அனிதாவின் தந்தை சண்முகம், அந்த குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
ரத்து செய்ய வேண்டும்
நீட் தேர்வால் என் மகளைப் போன்று பல அனிதாக்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு, 13 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் பல குழந்தைகள் மருத்துவக் கனவு சிதைந்ததால், தங்களுக்கு விருப்பமில்லாத ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்து படிக்கின்றனர். ஒருவேளை சமமான வாய்ப்புகளும், போட்டியும், தேர்வு முறையும் இருந்திருந்து, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் அவர்களின் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இருந்திருக்கும். நீட் தேர்வுக்கான போட்டியிலும், வாய்ப்பிலும் அனிதா போன்றவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படும் சூழலை நிச்சயம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை என் மகள் ஒரு ஆண்டு முன்கூட்டியே பிறந்திருந்தால் அவர் விரும்பிய டாக்டர் படிப்பு படிக்கும் வாய்ப்பை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே பெற்றிருந்திருப்பார். நீட் தேர்வு தொடரும் பட்சத்தில் அனிதாக்களுக்கான அநீதி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே மாணவர்களின் உயிரைக்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இட ஒதுக்கீடு
மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப (கிராமப்புற மாணவர்களின் உள் இட ஒதுக்கீட்டோடு) இட ஒதுக்கீடு வழங்கினால் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசுப்பள்ளிகளும் மேம்படும். இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், எங்களின் வழக்கறிஞருடன் நேரில் வந்து சமர்ப்பிப்பதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story