கண்டெடுக்கப்பட்டது, நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் சிலை


கண்டெடுக்கப்பட்டது, நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் சிலை
x
தினத்தந்தி 21 Jun 2021 8:59 PM GMT (Updated: 2021-06-22T02:29:24+05:30)

திருமானூர் அருகே கண்டெடுக்கப்பட்டது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் சிலை என்பது தெரியவந்தது.

கீழப்பழுவூர்:

அஸ்திவாரம் தோண்டினர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 41). இவர் வீடு கட்டுவதற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் அஸ்திவாரம் தோண்டும் பணியை தொடங்கினார். அந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில், முதுகுபுறம் வெளியே ெதரியும் வகையில் மண்ணில் புதையுண்ட நிலையில் ஒரு கற்சிலை இருந்தது. அந்த சிலை சுமார் 9 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த தொழிலாளர்கள், இது குறித்த தகவலை வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
மீட்கும் பணி
இதையடுத்து அங்கு வந்த சரவணன் புதையுண்டு கிடந்த கற்சிலையை தொழிலாளர்கள் உதவியுடன் வெளியே எடுக்க முயன்றார். மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை போராடியும் சிலையை மீட்க முடியவில்லை. இதையடுத்து சிலை சேதமடைந்து விடக்கூடாது என்று கருதி அந்த முயற்சியை கைவிட்டு, சிலையை முறைப்படி வெளியே எடுப்பது என்று முடிவெடுத்து, இது பற்றிய தகவலை வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு சரவணன் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை மீட்கும் பணி நடந்தது.
பெருமாள் சிலை
இதில் அப்பகுதியில் இருந்த மண் முழுவதையும் அகற்றி சிலையை பாதுகாப்பாக வெளியே எடுத்து பார்த்தபோது, அது நின்ற நிலையில் உள்ள பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிலை பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும், கலைநயமிக்க வேலைபாடுகளுடன் செய்யப்பட்டிருந்ததும், தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிலைக்கு சரவணன் உள்ளிட்ட கரையான்குறிச்சி கிராம மக்கள் மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி பூஜை செய்தும், பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
இதையடுத்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, 9 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story