ஊராட்சி துணைத்தலைவரை மாற்றியதாக ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு
பென்னகோணம் ஊராட்சியில் துணைத்தலைவரை மாற்றியதாக கூறப்பட்டதையடுத்து, ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னகோணம் ஊராட்சி மன்ற துணை தலைவராக செயல்பட்டு வரும் செல்வராணி, ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் மீது புகார் கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பென்னகோணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, செயலாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வந்த ஊராட்சி துணைத்தலைவர் செல்வராணியை வெளிப்பகுதியிலே சுமார் 10 நிமிடம் நிற்க வைத்து, பின்னர் அவர் உள்ளே சென்றதும் கூட்டம் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கு வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜூலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் செல்வராணியிடம், அலுவலக பணிக்கு ஒத்துவராததால் அவரை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி, வேறொருவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் துணைத்தலைவரின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு திரண்டததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story