மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது


மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது
x
தினத்தந்தி 22 Jun 2021 2:30 AM IST (Updated: 22 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

பெரம்பலூர்:

ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 28-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஊரடங்கு நீட்டிப்பில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் 2-ம் வகை மாவட்டங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், தற்போது கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகளுக்கு ஊரடங்கில் கூடுதல் நேரத்தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. முழு ஊரடங்கினால் வீட்டில் முடங்கி கிடந்த பொதுமக்களும் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
பஸ்கள் இயக்கப்படவில்லை
ஆனால் பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததால் நேற்று மாவட்டங்களில் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை, காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள், டீக்கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருந்து வியாபாரம் நடைபெற்றது. உணவகங்களில் தொடர்ந்து பார்சல் சேவை மட்டும் நடைபெற்றது. இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது.
அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட்டது. இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. சார் பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் முழுமையாக இயங்கியது. இதனால் அங்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது. அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடனும் இயங்கியது.
கூடுதல் நேரம் நீட்டிப்பு
கூடுதல் நேரம் நீட்டிப்பால் மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களது கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட்டது. காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அதனை பழுது நீக்கும் கடைகள் மாலை 5 மணி வரை இயங்கின. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை இயங்கின.

Next Story