நெல்லை மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்


நெல்லை மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
x
தினத்தந்தி 22 Jun 2021 2:52 AM IST (Updated: 22 Jun 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா வழிநடத்திய அ.தி.மு.க.வை கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கு காரணமாக இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி வெற்றி பெறுவதற்கும், கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கும் பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு சசிகலா, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி விட்டேன் என்று அறிவித்தார். தற்போது கட்சி சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உருவெடுத்து இருப்பதை பார்த்து அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள கட்சியை அபகரிக்கும் முயற்சியில், கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

அ.தி.மு.க.வுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை. எனவே, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சி வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மாணவர் நலனில் அக்கறை கொண்டதுபோல் பொய் வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்ற தி.மு.க., தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறி மாணவர்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலையும், தேர்தலுக்கு பிறகு ஆளும்கட்சியாக வந்துள்ளபோது ஒரு நிலையும் எடுத்து இரட்டை வேடம் போடுகிறது. இத்தகைய தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

தி.மு.க. அரசின் ஏமாற்று மற்றும் தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் தினமும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் பணியை சிறப்பாக செய்து வரும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடும் தி.மு.க. அரசை கண்டிப்பதோடு, பாதிக்கப்படும் தொண்டர்களுக்கு சட்ட நடவடிக்கை மூலம் பாதுகாப்பு அரணாக நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயல்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story