100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின


100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின
x
தினத்தந்தி 22 Jun 2021 4:16 AM IST (Updated: 22 Jun 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகளையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கின.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்கள் வேலையில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் முழுமையாக ஊழியர்கள் அமர்ந்து பணியில் ஈடுபட்டனர். 

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பிற அரசுத்துறை அலுவலகங்களும் நேற்று செயல்பட்டன. பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அங்கு வந்த அனைத்து பதிவு பணிகளையும் மேற்கொண்டனர். நேற்று மாற்றுத்திறனாளி ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர்.

முன்பு காய்கறி, மளிகை கடைகள், பிளம்பிங் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. நேற்று முதல் இந்த கடைகள் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டன. அழகு நிலையங்கள், பேன்சி கடைகள், ஜெராக்ஸ், காலணி கடைகள் உள்ளிட்ட அனைத்து சிறிய கடைகளும் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டன. இதேபோல் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களும் முழு அளவில் செயல்பட்டன. ஓட்டல்கள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், பஸ்களும் ஓடவில்லை.  அரசு ஊழியர்கள் சென்று வருவதற்கு தேவையான ஒருசில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் கார், ஆட்டோ, லாரிகள் உள்ளிட்டவை வழக்கம்போல் ஓடின.

Next Story