கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் ஆர்வமுடன் பங்கேற்கும் பொதுமக்கள்


கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் ஆர்வமுடன் பங்கேற்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Jun 2021 10:16 AM GMT (Updated: 22 Jun 2021 10:16 AM GMT)

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்தவமனையில் உள்ள கொரோனாவுக்கு பிந்ததைய கவனிப்பு சிகிச்சை மையத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

ஆண்டிப்பட்டி:

கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்படுவவோரின் உடல் மட்டுமின்றி, உள்ளமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் பயத்தை போக்கி, அவர்களை இயல்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்யும் வகையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், தேனி மாவட்டமும் ஒன்று ஆகும்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்றாக உள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 ஆயிரத்து 783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

  பொதுமக்கள் ஆர்வம்

கொரோனாவுக்கு இதுவரை 475 பேர் பலியாகி உள்ளனர். 40, ஆயிரத்து 276 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இவர்களின் பயத்தை போக்கி மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த மையத்தில் பிசியோதெரபிஸ்டு, மனநல ஆலோசகர் மற்றும் பொது மருத்துவர் என 3 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

மருத்துவர்களிடம் ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை பயமின்றி வாழ ஆலோசனை வழங்கப்படுகிறது. 

  பலூன் ஊதும் பயிற்சி

கொரோனாவுக்கு பிறகு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்கு பலூன் ஊதூதல் மற்றும் ஸ்பைரோ மீட்டர் மூலம் மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிந்த பின்னர் மீண்டும் அவர்கள், வீட்டில் இருந்தே மூச்சுப்பயிற்சி பெறும் வகையில் ரூ.250 மதிப்பிலான ஸ்பைரோ மீட்டர் கருவி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் விற்பனை செய்யப்படுகிறது. 

அனைத்து வசதிகளுடன் கூடிய கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் சிகிச்சை மையத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
------

Next Story