ரத்தம் சொட்ட, சொட்ட விசாரணை கைதி மறியல்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ரத்தம் சொட்ட, சொட்ட விசாரணை கைதி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
விசாரணை கைதி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபு (வயது 40) உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயபிரபுவுக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயபிரபுவை நேற்று டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இந்தநிலையில் சிகிச்சை பெற்ற வார்டில் இருந்து, அவர் ரத்தக்காயங்களுடன் திடீரென வெளியே ஓடி வந்தார்.
ரத்தம் சொட்ட, சொட்ட...
போலீசார் தன்னை தாக்கியதாக கூறி, அரசு மருத்துவ கல்லூரி முன்பு தேனி-மதுரை சாலையில் ரத்தம் சொட்ட சொட்ட திடீர் மறியலில் ஈடுபட்டார். ஜெயபிரபுவுடன் அவருடைய குடும்பத்தினரும் மறியலில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஜெயபிரபு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற போவதாகவும் கூறி ஜெயபிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறையில் அடைப்பு
சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஜெயபிரபுவை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு ரத்த காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஜெயபிரபுவை தாங்கள் யாரும் தாக்கவில்லை என்றும், சிறைக்கு செல்ல உள்ளதால் மருத்துவமனை கழிப்பறைக்கு சென்று தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
--------
Related Tags :
Next Story