மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். ஒட்டன்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பகத்சிங் பேசினார்.
அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டர்களை பயன்படுத்த முடியவில்லை. அரசின் உதவித்தொகையான ஆயிரம் ரூபாய்க்கு மாதந்தோறும் பெட்ரோல் வாங்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களுடைய மூன்று சக்கர வாகனங்களுடன் வந்து பங்கேற்றனர்.
Related Tags :
Next Story