திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பொதுமக்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இது தவிர சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி நேற்று திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதையொட்டி வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முகாமுக்கு வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன், வட்டார மருத்துவர் சீனிவாசன் பங்கேற்றனர்.
3 லட்சத்து 18 ஆயிரம் பேர்
இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சியின் 5, 8, 21, 25, 41, 47 ஆகிய 6 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 5 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதுதவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடந்த முகாம்களிலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரத்து 222 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story