கூடலூர்-சளிவயல் சாலை திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு
கூடலூர்-சளிவயல் சாலை நேற்று திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் தவறுதலாக அடைத்து விட்டதாக கூறி சாலையை திறந்துவிட்டனர்.
கூடலூர்
கூடலூர்-சளிவயல் சாலை நேற்று திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் தவறுதலாக அடைத்து விட்டதாக கூறி சாலையை திறந்துவிட்டனர்.
கொரோனா பரவல்
கூடலூர் நகராட்சி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியில் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் சாலையும் இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டது. பின்னர் சளி வயல் சாலை திறக்கப்பட்டது.
ஆனாலும் வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
திடீரென சாலை மூடல்
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கூடலூரில் இருந்து சளி வயல் செல்லும் சாலையில் நந்தட்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பு நகராட்சி ஊழியர்கள் இரும்பு தடுப்புகளை கொண்டு திடீரென மூடி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று பேனர் வைத்தனர். இதனால் சளிவயல், மில்லிக்குன்னு, தருமகிரி ஆகிய கிராம மக்கள் கூடலூருக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கினர்.
இதேபோல் காலையில் தங்களது கிராமங்களில் இருந்து புறப்பட்டு கூடலூர் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கிராமத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இவர்கள் கூடலூர்-சளிவயல் சாலையில் அடைக்கப்பட்ட பகுதியில் வாகனங்களுடன் காத்திருந்திருந்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தவறுதலாக இடம் மாறி ஊழியர்கள் சாலையை அடைத்து விட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு சாலை திறந்துவிடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வெளியூர் வாகனங்கள் செல்வதை கண்காணிக்க போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story