பிரசவத்தின்போது இளம் பெண் உயிரிழப்பு. உறவினர்கள் சாலை மறியல்


பிரசவத்தின்போது இளம் பெண் உயிரிழப்பு. உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2021 4:59 PM GMT (Updated: 2021-06-22T22:29:21+05:30)

வாலாஜா அருகே பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சிய போக்கால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜா

பெண் குழந்தை பிறந்தது

ராணிப்பேட்டை மாவட்டம், காட்ராம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி நித்யா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கொடைக்கல் மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப் பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து நித்யாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நேரத்தில் நித்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வரும் வழியில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
உயிரிழப்பு

அங்கு அவவை பரிசோதித்த டாக்டர்கள், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கொடைக்கல் மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கால்தான் நித்தியா உயிரிழந்ததாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜா போலீசார் நித்யாவின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத உறவினர்கள் நித்யாவுக்கு  பிரசவம் பார்த்த டாக்டர்கள், செவிலியர்களின்  அலட்சியப் போக்கால் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சமாதானம் ஆக மாட்டோம் எனக்கூறினர்.

நடவடிக்கை

ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் வாலாஜா தாசில்தார் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் டக்டர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலைந்து சென்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு நித்யாவின் உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story