டாஸ்மாக் கடையில் ரூ.3¾ லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஈச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் விற்பனை நேரம் முடிந்ததும், மேற்பார்வையாளரான சே.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 47) என்பவர் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் இரும்பு ஷட்டர் சேதமடைந்து கிடந்ததையும், மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், திண்டிவனம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை மர்மநபர்கள் கடப்பாறை கம்பியால் நெம்பி சேதப்படுத்திவிட்டு உள்ளே நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 350 மதிப்புள்ள 2440 மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story