பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -கலெக்டர் வலியுறுத்தல
கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை,ஜூன்.23-
கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சுகாதார துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் கூடிய ஊரடங்கின் மூலமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தலைமை மருத்துவர் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரும் திறம்பட சிறப்புடன் பணி மேற்கொண்டு நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர செயல்பட்டதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதே போல் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நோய் தொற்று முழுமையாக தடுக்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதற்கு பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி வெளியில் செல்லும் போது பாதுகாப்புடன் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகள் போதியளவு மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருக்கிறது.
100 சதவீதம் தடுப்பூசி
தடுப்பூசிகளின் இருப்புக்கு ஏற்ப அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனோ நோய் தொற்றில் இருந்து முற்றிலும் தற்காத்து கொள்வதற்கு தடுப்பூசிதான் பேராயுதமாக உள்ளதால் மருத்துவர்கள், அதிகாரிகள் பொதுமக்களிடம் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போடும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுதவிர, பிற மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அதற்குரிய மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்வதுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி, இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் யசோதாமணி, அரசு மருத்துவக்கல்லூரி நிலை மருத்துவ அலுவலர் முகமதுரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story