விவசாயி சாவில் திடீர் திருப்பம்: மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்ததாக மகன் கைது-பரபரப்பு வாக்குமூலம்


விவசாயி சாவில் திடீர் திருப்பம்: மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்ததாக மகன் கைது-பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:39 AM IST (Updated: 23 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம் அருகே விவசாயி மர்மசாவில் திடீர் திருப்பமாக அவரை மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டார்.

எலச்சிபாளையம்:
காயங்களுடன் விவசாயி பிணம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மரப்பரை நெடும்பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பழனிவேல் (வயது 56). விவசாயி. இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். 
இதனிடையே நேற்று முன்தினம் காலை இவருடைய தோட்டத்தின் அருகே உள்ள பாறையில் பிணமாக கிடந்தார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுதொடர்பாக எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, பழனிவேலின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது தெரியவந்தது.
மண்வெட்டியால் அடித்துக்கொலை
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வந்தனர். இதனிடையே பழனிவேலின் மகன் பிரவீன் (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, தனது தந்தையை அவர் மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
அதன் விவரம் வருமாறு:-
பெண்களுடன் தொடர்பு
எனது தந்தை பழனிவேல் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக எங்களை பிரிந்து விட்டார். நான் தாத்தா கந்தசாமி வீட்டில் வசித்து வந்தேன். எனது தந்தை தினமும் குடித்து விட்டு வருவார். அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது மட்டுமின்றி, பல பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்து வந்தது. இதனால் அவர் மீது நான் கோபத்தில் இருந்தேன்.
சம்பவத்தன்று இதுகுறித்து நான் அவரிடம் கேட்டேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் ஆத்திரத்தில் அவரை அங்கிருந்த மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்தேன். பின்னர் உடலை இழுத்து சென்று பாறை மீது போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் பிரவீனை கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். எலச்சிபாளையம் அருகே விவசாயி மர்மசாவில் திடீர் திருப்பமாக மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்ததாக அவரது மகனே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story