வரதராஜபுரத்தில் தாலிக்கயிறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் குடும்பத்தினர் தவிக்கும் நிலை
வரதராஜபுரத்தில் தாலிக்கயிறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் குடும்பத்தினர் தவிக்கும் நிலை
குடிமங்கலம்,
குடிமங்கலம் அருகே வரதராஜபுரத்தில் தாலிக் கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் குடும்பத்தினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாலிக்கயிறு
தமிழ் கலாசாரத்தில் தாலிக்கு எப்போதும் சிறந்த இடமுண்டு. தங்கத்தில் தாலி அணிவதைவிட மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதை பெரும்பாலான பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மங்கல
கயிற்றில் மூன்று முடிச்சுப்போட்டு கணவன் மனைவிக்கு இடையிலான பந்தத்தை உருவாக்குவதுடன் புதிய சொந்தங்களை அந்தப் பெண்ணுக்கு உருவாக்கிதருவதில் தாலிக்கயிறுக்கு பங்குண்டு. மங்களகரமானது மட்டுமல்லாமல் புனிதமானதாக கருதப்படும் தாலிக் கயிறு உற்பத்தியில் உடுமலையை அடுத்த வரதராஜபுரம் சிறந்து விளங்குகிறது.
இங்குள்ள பெரும்பாலான குடும்பத்தில் முக்கிய தொழிலாக தாலிக்கயிறு உற்பத்தி உள்ளது.இங்கு உற்பத்தி செய்யப்படும் தாலிக்கயிறு தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தாலிக்கயிறு டன் கணக்கில் தேங்கிக் கிடப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மூலப்பொருள்
இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- விசைத்தறியில் கிடைக்கும் நூலை மூலப்பொருளாகக் கொண்டு தாலிக்கயிறுகளை உற்பத்தி செய்கிறோம். பருத்தி நூலிலும் நைலான் நூலிலும் தாலிக்கயிறுகளை உற்பத்தி செய்ய முடியும். பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கழுத்தில் அணிந்துள்ள தாலிக்கயிறுகளை மாற்றி புதுகயிறுஅணிவது வழக்கமாகும். பெரும்பாலான சமூகத்தினரிடையே தாலி பிரித்துக்கோர்ப்பது என்பது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆடித்திருவிழா, வரலட்சுமி நோன்பு போன்ற நாட்களில் அதிகளவில் தாலிக் கயிறு விற்பனை இருக்கும். அத்துடன் ஒரு சில கோவில்களில் தாலிக்கயிறை பிரசாதமாக கொடுக்கும் வழக்கமும் உள்ளது. தற்போதைய நிலையில் கோவில்கள் எதுவும் திறக்கப்படவில்லை. திருவிழாக்கள் எதுவும் நடத்தப்படவில்லை. பெரும்பாலான திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது இதனால் தாலிக்கயிறுக்கானதேவை குறைந்துள்ளது.மேலும் கொரோனா பாதிப்பு என்பதுதமிழகம் மட்டுக்குமான பாதிப்பு என்றில்லாமல் உலகளாவிய பாதிப்பாக உள்ளது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தாலிக்கயிறுகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. அத்துடன் தாலிக்கயிறு உற்பத்திக்கான மூலப்பொருள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது இதனால் உற்பத்தியும் விற்பனையும் ஒருசேர பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கயிறுகள் தேங்கியுள்ளதாலும் புதிதாக உற்பத்தி செய்ய முடியாததாலும் எங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடங்கி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story