போலீஸ்காரரை வெட்டிக் கொன்ற ரவுடி கைது
நாகர்கோவிலில் போலீஸ்காரரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொன்றது
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போலீஸ்காரரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொன்றது அம்பலமாகியுள்ளது.
போலீசாக பணியாற்றியவர்
நாகர்கோவில் கலைநகர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீ சரவணன் (வயது 32). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றியவர். இவருக்கு சுஜி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ரஞ்சித் குமார் (25), ஸ்ரீ சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற பட்டகசாலியன்விளையை சேர்ந்த விக்ரமனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே ரஞ்சித்குமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். படுகாயமடைந்த ஸ்ரீ சரவணன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த விக்ரமன் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித் குமாரை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ரஞ்சித் குமாரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் கொலை நடந்த சுமார் 6 மணி நேரத்தில் நாகர்கோவில் பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித் குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
காரணம் என்ன?
கொலை செய்யப்பட்ட ஸ்ரீ சரவணனும், ரஞ்சித் குமாரும் உறவினர்கள் ஆவர். ரஞ்சித் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஸ்ரீ சரவணனின் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு பெண்ணை ரஞ்சித்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதை ஸ்ரீ சரவணன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீ சரவணன், ரஞ்சித்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஸ்ரீ சரவணனை, ரஞ்சித் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் குத்தினார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு தனது நண்பர் விக்ரமனுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இதையறிந்த ரஞ்சித்குமார் ஆத்திரமடைந்து, ஸ்ரீ சரவணனை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் அரிவாளால் கழுத்து, வயிறு, கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதை தடுக்க சென்ற விக்ரமனுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதில் ஸ்ரீ சரவணன் பரிதாபமாக இறந்தார்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் ஸ்ரீசரவணன், பணிக்கு சரிவர செல்லாததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரவுடி பட்டியல்
கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் மீது அடிதடி வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன. ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைதான ரஞ்சித்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கொலை நடந்த 6 மணி நேரத்தில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story