கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்கு காங்கிரீட் அமைக்கும் பணி இன்னும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கடந்த 19-ந் தேதி 2-வது அணுஉலையில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல் மின்உற்பத்தி தொடங்கியது.
இந்த நிலையில் கூடங்குளம் 1-வது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக நேற்று காலை 8.10 மணியளவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் சுமார் 45 முதல் 60 நாட்கள் வரை நடைபெறும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, 2-வது அணுஉலையில் தற்போது வரை 910 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story