சேரன்மாதேவியில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


சேரன்மாதேவியில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 1:46 AM IST (Updated: 23 Jun 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள ராமசாமி கோவிலில் ஒரு பழமையான கல்வெட்டு இருப்பதாக நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மைய இயக்குனர் மாரியப்பன், சேரன்மாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன், நந்தினி, அனுஷா, தங்கம், சூர்யா ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில், கல்வெட்டில் உள்ள வாசகத்தின் விவரங்கள் கிடைத்துள்ளன. கோவிலில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டு சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இது கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் மன்னனின் மகன் ராஜேந்திர சோழன் (1012-1044) ஆட்சி காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப்பட்டது. இதன் வாயிலாக கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

கல்வெட்டில் ஊரின் பெயர் "முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி சதுர்வேதி மங்கலம்" என்றும், இறைவனை "நிகரிலி சோழ விண்ணகர உடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு நந்தா விளக்கு ஒன்று தானமாக கொடுக்கப்பட்டு, விளக்கு எரிக்க நெய் தானம் வழங்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகிறது. அந்த விளக்கில் நெய் அளவுக்கு அதிகமாக ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இந்த ஆய்வுக்கு உதவி செய்தமைக்கு தமிழக    இந்து    சமய     அறநிலையத்   துறைக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Next Story