வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இனி அனுமதி கிடையாது


வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இனி அனுமதி கிடையாது
x
தினத்தந்தி 23 Jun 2021 2:12 AM IST (Updated: 23 Jun 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து நாகர்கோவிலில் நோயாளிகளை பிரித்து அனுப்பும் வகைப்படுத்தும் மையம் மூடப்பட்டது. யாரையும் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில்:
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து நாகர்கோவிலில் நோயாளிகளை பிரித்து அனுப்பும் வகைப்படுத்தும் மையம் மூடப்பட்டது. யாரையும் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
வகைப்படுத்தும் மையம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி ஆகிவற்றில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த மையங்களுக்கும், வீட்டு தனிமைப்படுத்துதலுக்கும் நோயாளிகளை பிரித்து அனுப்பக்கூடிய வகைப்படுத்தும் மையம் முதலில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இந்த வகைப்படுத்தும் மையம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அமைந்துள்ள கன்கார்டியா பள்ளிக்கு மாற்றப்பட்டது.
பாதிப்பு குறைந்தது
இந்த மையத்தில் காலை முதல் இரவு வரை 4 டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு நோயாளிகளை பிரித்து அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஒரு நாளைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500 வரை சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழாக அதாவது 83 ஆக குறைந்தது. மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததின் காரணமாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி, கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. எனவே தற்போது கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி ஆகியவற்றில் மட்டுமே கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தக்கலை அரசு மருத்துவமனையில் 70- க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும், நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் 1,496 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததைத் தொடர்ந்து நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்த வகைப்படுத்தும் மையம் நேற்று முதல் மூடப்பட்டது. இந்த மையத்தில் பணியில் இருந்த 4 டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை பணிக்கு நியமிக்கப்பட்டனர். அத்துடன் வகைப்படுத்தும் மையம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.
வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி, வெளியிடங்களில் சுற்றித்திரிவதாகவும், அதன்மூலம் கொரோனா தொற்று பரவுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கொரோனா நோயாளிகள் யாரையும் வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டாம் எனவும், நோயாளிகள் அனைவரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் இனிமேல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story