மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை திடீர் சாவு
விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பரிதாபமாக இறந்தது.
அழகியபாண்டியபுரம்
விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பரிதாபமாக இறந்தது.
நோயுற்ற யானை
பூதப்பாண்டி அருகே உடையார்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காட்டு யானை விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் அந்த யானையை விரட்டியடித்து மீண்டும் அந்த பகுதியில் நுழைய முடியாதபடி அகழி தோண்டினர்.
இதையடுத்து அந்த யானை திடல், ரத்தினபுரம், மூக்குத்தி மலைப்பகுதியில் சுற்றி திரிந்து விளைநிலங்களை நாசப்படுத்தி வந்தது. இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்த போது, அது வயது முதிர்ந்த பெண் யானை என்பதும், நோயுற்று இருப்பதும் தெரிய வந்தது. யானையின் பின்பகுதியில் பெரிய புண்கள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
அதன்படி திருநெல்வேலி மண்டல வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் திடல் பகுதியில் முகாமிட்டனர். அப்போது, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்த யானையின் கால்களை கட்டி போட்டு அதன் உடலில் இருந்த புண்களில் மருந்து போட்டு சுத்தப்படுத்தினர். தொடர்ந்து அதை குணப்படுத்த தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்ைச முழுமையாக முடிந்து அது பூரணமாக குணமடைந்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் யானையை கண்காணித்து வந்தனர்.
பரிதாப சாவு
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் யானை திடீரென இறந்தது. இதனை தொடர்ந்து நெல்லை மண்டல வன பாதுகாவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் குமரி மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி அலுவலர் அகில் தம்பி, அழகியபாண்டியபுரம் வனசரகர் மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் யானையின் உடல் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் அந்த பகுதியில் பொக்லைன் எந்திரத்தால் பெரிய பள்ளம் தோண்டி யானையின் உடலை புதைத்தனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை திடீரென இறந்த சம்பவம், வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story