செங்கோட்டை-புனலூர் அகல ரெயில்பாதை மின்மயமாக்கப்படுமா?
செங்கோட்டை-புனலூர் அகல ரெயில்பாதை மின்மயமாக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செங்கோட்டை:
தென்தமிழகத்தில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் ரெயில்பாதை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை ரெயில்பாதை மற்றும் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்பாதை இவற்றின் அகலரெயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளுக்கான ஒப்பந்த ஆணைகள் ெரயில்வே அமைச்சகத்தால் ஒரு குழுமத்திற்கு வழங்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2023-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கேரள மாநிலம் கொல்லம்-புனலூர் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னையை சேர்ந்த ஒரு குழுமத்தினர் செய்து வருகின்றனர். இந்த பணி அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொல்லம் - விருதுநகர் வழித்தடத்தில் புனலூர்-செங்கோட்டை வழித்தடம் மட்டும் மின்மயமாதல் இல்லாத ெரயில் பாதையாக ஒரு தீவு போல திகழும். எனவே செங்கோட்டை - புனலூர் ரெயில்பாதை மின்மயமாதலுக்கான ஆணையை விரைந்து பெற்று தந்திடுமாறு செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, உபதலைவர் ராஜேந்திர ராவ், செயலாளர் கிருஷ்ணன், இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், செய்தி தொடர்பாளர் ராமன், பொருளாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் வேண்டுகோள் கடிதங்களை அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் வளர்ச்சி பெற்றிட புனலூர்-செங்கோட்டை ெரயில்பாதை மின்மயமாதல் மிக அவசியமாகும். எனவே இதற்கான ஆணையை பெற்று தந்திட வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story