கும்மிடிப்பூண்டி அருகே நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து டிராக்டர்கள் சிறைபிடிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து டிராக்டர்கள் சிறைபிடிக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜகண்டிகை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த இரும்பு உருக்கு தொழிற்சாலைக்காக சிலர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீரின் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தொடர்ந்து பல புகார்களை அளித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேற்கண்ட தொழிற்சாலைக்கு சட்டவிரோதமாக தண்ணீர் வினியோகம் செய்ய முயன்ற 10 டிராக்டர்களை பெண்கள் உள்பட கிராமமக்கள் சிலர் காலி குடங்களுடன் சிறை பிடித்தனர். மேலும் அந்த தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு விடிய விடிய பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். இருப்பினும் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சி வியாபார நோக்கில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து பொதுமக்களில் சிலர் தொடர்ந்து தொழிற்சாலை முன்பு கூடி உள்ளனர்.
Related Tags :
Next Story