50 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சர்கள் பட்டியல் கவர்னரிடம் வழங்கினார் ரங்கசாமி


50 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சர்கள் பட்டியல் கவர்னரிடம் வழங்கினார் ரங்கசாமி
x
தினத்தந்தி 23 Jun 2021 10:41 AM IST (Updated: 23 Jun 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

முடிவுக்கு வந்தது 50 நாட்கள் இழுபறி பா.ஜ.க 2 அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரஸ் 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார் .

புதுச்சேரி, 

புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேி நடந்தது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

முதல் - அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 7-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். மறுநாளே ரங்க சாமிக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே பொறுப்புகளை பிரித்துக் கொள்வது, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு ஏற்பட்டது. துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்டு பா.ஜ.க. நிர்ப்பந்தம் செய்தது. இதற்கு ரங்கசாமி சம்மதிக்கவில்லை.

இது தொடர்பாக ரங்க சாமியை சந்தித்து பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகளை பா.ஜ.க.வுக்கு வழங்க ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து பா.ஜ.க. மேலிட பார்வையாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., புதுச்சேரி வந்து ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க.வுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி, முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே சபாநாயகர் பதவியை விட்டு கொடுத்துள்ள நிலையில் முக்கிய இலாகாக்களை கொடுக்க மறுத்ததாகவும் துணை முதல்-அமைச்சர் பதவி என்பதை புதிதாக உருவாக்க வேண்டாம் என்றும் அவரிடம் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.

சபாநாயகர், 2 அமைச்சர்களின் பெயர்களை மட்டும் தெரிவிக்குமாறும் இலாகாக்களை தானே ஒதுக்குவதாகவும் அவரிடம் திட்டவட்டமாக ரங்கசாமி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வத்தின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவர் சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்து தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கட்சி மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதம் தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் பதவிக்கு நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், ராஜவேலு ஆகிய 3 பேர் அமைச்சர்கள் ஆகலாம். அதற்கான பட்டியலை முதல்-அமைச்சர் ரங்கசாமி தயார் நிலையில் வைத்துள்ளார்

 கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடன் இன்று   புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று  கவர்னர்  மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.பட்டியலில் பா.ஜ.க 2 அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரஸ் 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியல் உள்ளது. 

புதுச்சேரியில் 50 நாட்களுக்கு மேலாக அமைச்சரவை பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி இன்றுடன் முடிவுக்கு வந்தது!

இதையடுத்து,அமைச்சர்கள் பட்டியலை  கவர்னர்  தமிழிசை, உள்துறை அனுமதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார். அதையடுத்து, பவுர்ணமியான நாளையோ, வரும் 27-ம் தேதியோ அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளது. 

Next Story