அணு மின்நிலைய விஞ்ஞானி மர்மச்சாவு
கல்பாக்கம் அணு மின்நிலைய விஞ்ஞானி மர்மமான முறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
சென்னை,
ஆந்திர மாநிலம் வட்டிப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சத்திய சாய்ராம் (26) ஆந்திர பிரதேச பல்கலைக்கழகத்தில் பிடெக். கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்த அவர் கடந்த 1½ ஆண்டுகளாக கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார்.
கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு வழக்கம்போல விடுதியில் இருந்து உடற்பயிற்சி செய்வதற்காக சைக்கிளில் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் விடுதிக்கு அவர் திரும்பாததால் அவருடன் பணிபுரியும் ஐதராபாத்தை சேர்ந்த அவரது நண்பர் சிவ கிருஷ்ணன் சத்திய சாய்ராமின் பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது தந்தை பசுமர்தி நாகேசுவரராவ் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திய சாய்ராமை தேடி வந்தனர். இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் அருகே கூவத்தூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்பாக்கம் மற்றும் கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர்.
உடலின் அருகே பெட்ரோல் வைக்கப்பட்டிருந்த காலியான ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கிடந்தது. சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் காணாமல் போன கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி சத்திய சாய்ராம் என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story