வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக, வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், தொடர் மழை எதிெராலியாக 67 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது.
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக, வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று காலை முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறந்து விடப்பட்டது. அணையின் சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.
3,969 கனஅடி
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் கனஅடி, பாசனத்துக்கு 900 கனஅடி, மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு 69 கனஅடி என மொத்தமாக வினாடிக்கு 3 ஆயிரத்து 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்காரணமாக வைகை அணையின் இருகரைகளையும் இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது. முதல் இரண்டு நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்த 3 நாட்களில் படிப்படியாக அதன் அளவு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
--------
Related Tags :
Next Story