கிரிவலப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில் கிரிவலப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தேனி:
கிரிவலப் பாதையில் சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில், கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள மலையை சுற்றிலும் கிரிவலப் பாதை அமைந்துள்ளது.
பெரியகுளம் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் உள்ளன. இதில் சிறுத்தைகள் அடிக்கடி மலையடிவார பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக கைலாசநாதர் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதி மற்றும் கிரிவலப் பாதையில் சிறுத்தை உலா வருவதை விவசாயிகள் சிலர் பார்த்துள்ளனர். இதை அவர்கள் ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கிரிவலப் பாதை அருகில் ஒரு பாறையில் சிறுத்தை உலா வந்ததை தூரத்தில் இருந்து ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு
இதற்கிடையே கிரிவலப் பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க பெரியகுளம் வனச்சரகருக்கு, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் நேற்று கடிதம் அனுப்பினார்.
மேலும் அவர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கும் நேற்று தகவல் கொடுத்தார். இதையடுத்து பொதுமக்கள், விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கைலாசப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு எச்சரிக்கை
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமாரிடம் கேட்டபோது, "கிரிவலப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த சிறுத்தை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, மலையடிவார பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மாலை நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளதால், மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வனத்துறையினரும் இந்த பகுதியில் ரோந்து சென்று சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.
-------
Related Tags :
Next Story