எட்டயபுரம் அருகே சாலை விபத்து கணவன், மனைவி பலி
எட்டயபுரம் அருகே லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிய கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
எட்டயபுரம்,:
எட்டயபுரம் அருகே லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிய கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பூர்வீக ஊருக்கு சென்றபோது...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி வாணி (51). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று காலையில் கண்ணன் தன்னுடைய மனைவி வாணியுடன் தனது பூர்வீக ஊரான விளாத்திகுளம் அருகே வில்வமரத்துபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
எட்டயபுரம் அருகே புதுப்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை கண்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே விளாத்திகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (23) தன்னுடைய தாயார் வசந்தாவுடன் (55) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் சில அடி தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டது.
உடல் நசுங்கி பலி
இந்த கோர விபத்தில் உடல் நசுங்கிய வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கண்ணன், மகாராஜன், வசந்தா ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த கண்ணன், மகாராஜன், வசந்தா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய்-மகனுக்கு தீவிர சிகிச்சை
மகாராஜன், வசந்தா ஆகிய 2 பேருக்கும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
படுகாயம் அடைந்த மகாராஜன், தாயாருடன் கோவில்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றபோது விபத்தில் சிக்கினர்.
டிரைவர் கைது
இதேபோல் கோவில்பட்டியில் இருந்து சரள் மண் ஏற்றிய லாரி, விளாத்திகுளம் அருகே சூரங்குடிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதுதொடர்பாக லாரி டிரைவரான கழுகுமலையைச் சேர்ந்த முருகனை (51) போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story