மதுப்பிரியர்களால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்
பழனி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், அண்டை மாவட்டத்தினரின் படையெடுப்பால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
மதுப்பிரியர்கள் படையெடுப்பு
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதனால் அனைத்து மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கடைகள் திறக்கப்படாத மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள், அண்டை மாவட்டத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் முன்பு தினமும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடைகளின் அருகே திரண்டிருக்கும் மதுப்பிரியர்களுக்கு மதுபானம் கொடுத்து முடிப்பதற்குள் விற்பனையாளர்கள் விழி பிதுங்கி போய் விடுகின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு திருவிழா கூட்டம் அங்கு கூடுகிறது.
கொரோனாவுக்கு கொண்டாட்டம்
குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள அய்யம்பாளையம், சாமிநாதபுரம், வயலூர், பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்து மதுபானம் வாங்கி செல்கின்றனர்.
ஒரு சில கடைகளில் மதியம் 2 மணிக்கே மதுபானங்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. மதுக்கடைகள் திறக்கும் முன்னரே அங்கு மதுப்பிரியர்கள் மதுவாங்க போட்டி போட்டு காத்திருக்கின்றனர். சிலர் அதிகாலையிலேயே மதுபான கடைகளுக்கு வந்து காத்திருக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அண்டை மாவட்டமான திருப்பூரில் இருந்து பலர் தோட்ட பகுதி வழியாக வந்து மதுபானம் வாங்கி செல்கின்றனர். மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கிடையாது.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டத்தில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி விட்டது. இதனால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் தான்.
அழையா விருந்தாளி
பணம் கொடுத்து மதுபானம் வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள் தங்களது வீடுகளுக்கு, அழையா விருந்தாளியாக கொரோனாவையும் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் கடைகளின் முன்பு பெயரளவுக்கே கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வேதனையே.
மதுப்பிரியர்களால் மீண்டும் கொரோனா உத்வேகம் அடையும் என்பதில் அய்யமில்லை. எனவே மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story