டிரைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கிராமமக்கள் சாலை மறியல்


டிரைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:47 PM IST (Updated: 23 Jun 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட டிரைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பகண்டை கூட்டுரோட்டில் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரிஷிவந்தியம்

லாரி டிரைவர்

பகண்டை கூட்ரோடு அருகே சீர்ப்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் எழிலரசன்(வயது 26) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவரும் பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரும் புஷ்பகிரி குளக்கரையில் மது அருந்தினர். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி எழிலரசனின் மாமனார் சங்கருக்கு முருகன் தகவல் தெரிவித்தார். 
உடனே அவர் சம்பவ இடத்துக்கு வந்து எழிலரசனை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

ஆனால் எழிலரசனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தாய் முத்தம்மாள் பகண்டை கூட்டுரோடு போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எழிலரசன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடன் மது அருந்திய முருகன் மற்றும் தமிழழகன் ஆகியோரை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் முத்தம்மாள், மனைவி அபிநயா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பகண்டைகூட்டுரோடு மும்முனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர் பாபு, பகண்டை கூட்ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அசோக் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எழிலரசனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.




Next Story